அறிமுகம்
டாக்டர் சக்தி சுப்பிரமணி ஒரு உலகறிந்த சித்த மருத்துவர், மேலும் ஒரு மருத்துவ ஜோதிடர். இவர் ஜோதிடத்தை ஆராய்ந்து, அவரவர் நோயை அறிந்து, அது எப்போது வந்தது? எந்தக் காலத்தில் அது விலகிப் போவது? அது எந்த பகுதியை பாதிக்கிறது? அதற்கு என்ன பரிகாரம்? என்ன மருத்துவம் வேண்டும்? என தெரிந்து மருத்துவம் செய்பவர்.
கடந்த 40 ஆண்டுகளாக அவர் ஜோதிடத்தின் துணை கொண்டு மருத்துவத்தை சிறப்பாக வெற்றிகரமாக தீராத நோய்களுக்கும் தீர்வு தரும் வகையில் மருத்துவ ஜோதிடம் என்ற பெயரில் ஜோதிட ஆய்வு செய்த பின் நோய்களுக்கான எளிய பரிகாரங்களையும் பாதுகாப்பான மருத்துவத்தையும் செய்துவருகிறார்.

ஆங்கில மருத்துவத்தின் தந்தை எனப்பட்ட “ஹிப்போகிரேட்ஸ்” என்னும் மாமேதை ஜோதிடம் அறியாத ஒருவர் நிச்சயமாக நல்ல மருத்துவராக இருக்க முடியாது என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளதை நாம் இங்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மருத்துவரும் ஜோதிடம் அறிந்தால் “நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி” தீர்வு காண இயலும் என்பதை வலியுறுத்தி சொல்லி இருக்கிறார். நம் இந்திய ரிஷிகளும், முனிவர்களும், மருத்துவ மேதைகளும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவ்வழியைப் பின்பற்றி வந்தனர் என்பதை நம்முள் ஒரு சிலரே அறிவோம். இன்று இந்நிலையை மாற்றி மருத்துவ ஜோதிடத்தை "SUN" தொலைக்காட்சி மூலமாக உலகறியச் செய்து வரும் உன்னதப் பணியை டாக்டர். சக்தி சுப்பிரமணி செய்து வருகிறார்.

இவர் அகத்தியர் மேல் பேரன்பு கொண்டவர். அகத்தியரை தன் மானசீக குருவாகக் கொண்டு இவர்தம் கனவில் நேர்ந்த உத்திரவுப்படி அகத்திய முனிவரின் திருஉருவச் சிலையை வீட்டிலேயே பிரதிட்டை செய்து வணங்கி வருகிறார். அகத்தியியரும் தன் பரிபூரணமான அருளாசியை இவர்பால் காட்டி இவரை வழிநடத்தி வருகிறார்.

டாக்டர். சக்தி சுப்பிரமணி அவர்கள் தம் நோயாளிகளுக்கான மருந்துகளை அகத்தியர் முன்னிலையில் தாமே தன் உழைப்பில் தயாரித்து வழங்கி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளாக அகத்தியரின் அன்புக்கு பாத்திரமான இவரை அரவணைத்து புதுவாழ்வு தர இவருக்கு சீரடி சாய் பாபாவின் அன்பும், அரவணைப்பும் வழிகாட்டுதலும் கிட்டவே இவருக்கு இரு கண்களாக விளங்கும் அகத்தியர், மற்றும் சீரடி சாயி ஆகிய இருவர் துணையால் தன்னை நாடி வருவோர்க்கு நலம் செய்து வருகிறார். மருத்துவ ஜோதிட அறிவும், மகான்களின் ஆசியும் இவர்தம் வெற்றிக்கு அடித்தளமாக இருந்து இவரை வழி நடத்திச் செல்கின்றன. இவர் பல்லாண்டுகளாக ஊன்றிப்படித்த நவீன மருத்துவ அறிவும் இவருக்கு நோய் தீர்க்க உதவும் வகையில் அமைந்துவிட்டது.

மருத்துவ ஜோதிட ஆய்வு, பாரம்பரிய மருத்துவத்தின் அனுபவம், நவீன மருத்துவ அறிவு ஆகிய இவை மூன்றும் மிகக் குழப்பமான நோய்களையும், தீராத நோய்களையும் இனங்கண்டு, எளிய முறையில் பாதுகாப்பான வகையில் தீர்த்து வைக்க உதவுகின்றன.

புற்றுநோய் போன்ற ஆபத்தான, அச்சம் தருகின்ற நோயைக்கூட இது உண்மையிலேயே நோய்தானா? அல்லது “போகூழால் தோன்றும் மடி” என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னதுபோல நேரம் கெட்டதால் ஏற்பட்ட நோயா? என்பதை உணர்ந்து கிரகப் பரிகாரங்கள் செய்யச் சொல்லி மருத்துவம் செய்வதால் தீராத நோய்களும் தீர்கின்ற அதிசயத்தை உணரமுடிகின்றது. மேலும் ஒரு நோய்க்கு அறுவை சிகிச்சை தேவையா? அல்லது மருந்திலேயே குணமாகுமா? என்கிற முடிவையும் எடுக்க இயலுகிறது.

ஒருவருடைய பிறந்த தேதி, நேரம், இடம் இவற்றை கொண்டு கணித்த ஜோதிடத்தின் மூலம் உச்சி முதல் பாதம் வரை வருகின்ற நோய்களையும், அவை தோன்றிய காலத்தையும், பாதிக்கும் பகுதியையும், விட்டுப்போகின்ற நேரத்தையும், வழியையும் இவர் கணித்து மருத்துவம் செய்வது புதுமையாக இருப்பினும் இது நாம் மறந்து விட்ட மருத்துவமுறை என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். ஒருவருக்கு எந்த கிரகம் எந்த பகுதியில் எந்த நேரத்தில் துன்பம் தரும் அல்லது தருகிறது என்பதைக் கணித்து அதற்கான எளிய கிரக பரிகாரங்கள் சொல்வது இவரது சிறப்பான வழியாகும்.

மருத்துவப் பணியோடு இவர் “சாயியைத் துதி மனமே” என்னும் புத்தகமும், சீரடி சாயி பற்றிய நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். அத்துடன் இவர் எழுதிய தமிழில் ‟பாரம்பரிய மருத்துவம் பகுதி -I, II, III ‟ என்னும் நூலும் வெளியிடப்பட்டு அனைத்து நூலகங்களிலும் உள்ளன.

இவர் வெளியிட்ட பாபாவின் பாடல்கள் கூட சிலரது நோய்களைத் தீர்த்ததை காண முடிகிறது. இவர் மேடைகளிலும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் எப்போதும் ஆன்மீகத்தையே முன்வைத்து ஆண்டவன் அருளால் பேச்சிலும், செயலிலும், வெற்றி கண்டு வருகிறார். இவர் 2002 முதல் 2010 வரை திருத்தணி அருகே K.G. கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள சீரடி சாயி ஆலயத்தில் மாதம் இருமுறை நாள் ஒன்றுக்கு ஏழுநூறுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவம் செய்து குணப்படுத்தியதால் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கும் இவர் புகழ் பரவ சீரடி சாயியின் கிருபை காரணமாக அமைந்தது. இவர்பால் கொண்ட நம்பிக்கையால் சீரடி சாயி தொலைக் காட்சிக்கு செல்லும்படி கட்டளை இட்டார், அவர்தம் கட்டளையே இன்று "SUN" தொலைக்காட்சியில் இவர் தோன்றக் காரணமாகும்.

இவர் ஆண்டு தோறும் மார்கழி மாத ஆயில்யம் நட்சத்திரம் வருகின்ற தினத்தில் தம் குருநாதர் அகத்தியருக்கு 108 சங்காபிஷேகமும், சிறப்பு ஆராதனைகளும் செய்வதோடு சாயிபாபாவுக்கும் பூஜைகள் செய்து வருகிறார். இதில் நூற்றுக்கணக்கான அன்பர்கள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.



இறைவன் அருளாலும் இவர்தம் விடா முயற்சியாலும் மட்டுமே இவர் இன்றைய உலகில் வலம் வருகிறார். இது நாள் வரை இவர் சிறிய விளம்பரத்தைக் கூடத் தனக்காகச் செய்து கொள்ளவில்லை என்பது இன்றைய சூழ்நிலையில் வியப்புக்குறியது.



கடந்த காலம் இப்படி சென்ற போதிலும் இன்றைய உலகத் தேவையைக் கருதியும், அழிந்துவரும் பாரம்பரிய மருத்துவத்தையும், ஆன்மீக உணர்வையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும், பாரம்பரிய மருத்துவம் பீடுநடை போட்டு உலகம் முழுவதும் ஆட்சி செய்யவும். ஆன்மீகத்தின் ஆனந்தம் அனைவர்க்கும் கிடைக்கவும் இத்தளம் உதவும் என்று நம்புகிறார். மேலும் இவர் வாழ்க்கையில் இவரின் மனைவி சுகுணாவின் பங்கு மிகப் பெரியது ஆகும். ஒரு ஆண் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பது போல் இவருக்கு இவரது மனைவி இருக்கிறார். ஒரு தாயாகவும் இருந்து இவர் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஊக்கம் அளித்து வருகிறார்.

நாட்டு மருத்துவம் என்னும் "SUN" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவருக்கு துணையாய் இருந்து செய்பவர் இவரது மகள் டாக்டர் எஸ்.நந்தினி ஆவார். இவர் சிறுவயது முதலே தன் தந்தையுடன் இருந்து கற்ற கல்வியும், அனுபவமும் இவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. இவரே தொலைக்காட்சியில் மட்டுமின்றி மருத்துவப் பணியிலும் இவரது தந்தைக்கு மிக்க உதவியாகவும், இவர் விட்டுச் செல்லும் பணியை தொடர்ந்து செய்யும் வாரிசாகவும் இருந்து வருகிறார்.

நன்றி:
ஆரோக்கியம் ஆரம்பமாகட்டும்!
ஆண்டவன் கருணையை அனைவரும் பெறட்டும்!
இன்பமே எங்கும் விளங்கட்டும்!