உடல் நலமும் மன நலமும்
மனிதன் என்பவன் வெறும் எலும்பு, தசை, நரம்பு ஆகியவற்றின் கூட்டாக மட்டுமே இல்லை, பிற உயிரினங்களுக்கில்லாத மன வளர்ச்சியும் ஆற்றலும் மனிதனுக்கு உண்டு. உடல், உயிர், மனம் என்பனவற்றின் ஒட்டு மொத்தமான உருவமாகவே மனிதன் இருக்கின்றான். ஐம்பொறிகளுக்கும், ஐம்புலன்களுக்கும் ஆதரவாய் நின்று உயிரையும், உடலையும் இணைக்கும் கருவி மனமே ஆகும். மனமே இன்ப துன்பங்களுக்கு இருப்பிடமாகவும் அமைந்துள்ளது.
மனநலம் குறைவுபடும் போது மனம் அதிர்ச்சிகளை உண்டாக்கி உடலை நோகச் செய்கிறது. எனவே உடல் நலம், மனநலம் ஆகிய இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவையாகவே அமைந்துள்ளன எனலாம். நோய் எனும்போது உடல் நோய், மனநோய் என இருவிதமாகக் கொள்வர். இதனால் உடல், மனம் இவ்விரண்டுக்கும் ஏற்படும் துன்பமே பிணி அல்லது நோய் என அறியப்படுகின்றது. “மனோ ஆரோக்கியமே தேக ஆரோக்கியம்” என்னும் பழமொழி இங்கு நினைவு கூறத்தக்கது.

மனிதன் உடலாலும் மனத்தாலும் இன்பம் பெறுவதையே எப்போதும் விரும்புகிறான். தனக்குத் துன்பம் நேர்ந்தபோது அதனின்று விடுபடப் பல்வேறு வழிகளை மேற்கொள்ளுகிறான். இவையே அவனுக்க மருந்தாக அமைந்து அவனை மீண்டும் நோயற்ற வாழ்வு வாழச் செய்கின்றன. ஒருவருக்கு நோய் கண்டதும் அது எத்தன்மையது? எக்காரணம் பற்றி வந்தது? அதிலிருந்து மீளும் வழிகள் என்னென்ன? என்று முழுமையாக ஆய்ந்து அறிந்து பின்னர் அதற்கான மருத்துவம் செய்வததுதான் சிறப்பாகும்.

உடலை பாதிக்கும் முப்பிணிகள்
மனித உடலானது முப்பிணிகள், எழுவகைத் தாதுக்கள், மும்மலங்கள் ஆகியவற்றால் நிலைத்துள்ளது. முப்பிணிகளாவன வாதம், பித்தம், ஐயம் அல்லது சிலேத்துமம் என்பவையாகும். ஏழு வகைத் தாதுக்களாவன: வெண்குருதி, இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, எலும்புட்கரு, உயிரணுக்கள் ஆகும்,. மும்மலங்களானவன மலம், சிறுநீர், வியர்வை ஆகியனவாகும். அணு அல்லது அணுக்கூட்டங்களாகவும் மலங்கள் கழிபொருள்களாகவும் விளங்குகின்றன. இம்மூன்றின் மிகுதி அல்லது குறைவால் ஏற்படுவதே நோய் எனப்படும்.