மருத்துவ ஜோதிடம்
உலகில் பிறவிகளில் அரியது மானிடப் பிறவி என்பது ஆன்றோர் வாக்கு. அதிலும் மன நோய், உடல் நோய், உடல் ஊனம் இன்றிப் பிறத்தலே பெறும்பேறு ஆகும். உலகில் மனிதனுக்கு எத்தனைதான் செல்வங்கள் இருந்த போதிலும் நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம் ஆகும். ஒருவருக்கு எவ்வளவு வசதிகள் இருந்த போதிலும் உடல் நோயுற்றபோது அவ்வசதிகளை அனுபவிக்க அமைதியின்மைக்கு வழி வகுத்து உடலையும் பலவீனப்படுத்துகிறது. இவ்வாறு உடலும் உள்ளமும் போட்டியிட்டுக் கொண்டு ஒன்றையொன்று பலவீனப்படுத்திக் கொள்கின்றன. இப்படி மனமும் உடலும் கெட்டு விட்ட பின்பு அவற்றைச் சரிசெய்து மீண்டும் பழைய நிலைக்குக்கொண்டு வருவதற்குப் பல வழிகள் இருந்த போதிலும் அவை வருமுன் காத்து அவற்றினின்று விலகி நழ்வாழ்வுக்கான வழிவகைகளைத் தேடுவதுதான் நோய்த் தடுப்பு அல்லது வருமுன் காத்தல் என்பது ஆகும்.
உலகெங்கிலும் தற்போது காதுக்கொரு மருத்துவர், கண்ணுக்கொரு மருத்துவர் எனப் பகுதி பகுதியாக மனித உடலை பிரித்து வைத்துக்கொண்டு மருத்துவத்தை ஒரு மாபெரும் தொழிலாகச் செய்து வந்த போதிலும் மானுடர் தம் துன்பங்களை முற்றிலும் அவர்களால் குணப்படுத்த இயலவில்லை என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். விஞ்ஞானம் என்றும் விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்றும் புதிய கண்டுபிடிப்பகள் என்றும் மார்த்தட்டிக் கொண்டாலும் மனுடர் தம் துயரங்களையும் நோய்களையும் விஞ்ஞான வளர்ச்சியால் சிறிதளவே அல்லது தற்காலிகமாவே குணப்படுத்த இயலுகிறது. அல்லது விஞ்ஞானத்தின் முயற்சி நம்மை குணப்படுத்திவிட்டது என்ற மாயையாக கூட அது இருக்கலாம்.

நாம் வான சாத்திரத்தைக் கொண்டு வானிலை பற்றி அறிந்து கொண்டு மழை, புயல், வெள்ளம், நிலநடுக்கம் இவைகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். ஆனால் நம் ஆன்மா முன் செய்த இரு வினையால் வந்த நோய்களை முன்கூட்டி அறிந்து கொள்ள ஜோதிடசாத்திரத்தைக் கையாண்டனர் நம் முன்னோர்கள். ஸ்டெதாஸ்கோப், என்டோஸ்கோப் போன்ற நவீன கருவிகளைவிட நம் முன்னோர் ஹாரோஸ்கோப் (ஜோதிடத்தின்) பின் உதவியாலேயே மன, உடல், ஆன்மா நோய்களைக் கண்டறிந்து தீர்வுக்கு வழி கோலினார்.

மேலும் சிவன் கோயில்களுக்குச் செல்கின்ற சிவனடியார்களுக்கு விபூதியும் வில்வதளமும் ஆன்மீகப் பிரசாதமாக தரப்படுவதை ஒரு மருத்துவ முறையாகவே நாம் கொள்ள வேண்டும். இது போலவே பொரும் நோய்ககைத் தீர்க்க கூடிய வேம்பும் மஞ்சளும் மாரியம்மன் கோயில்களிலும், துளசி, இலவங்கம், பச்சைக் கற்பூரம், ஏலக்காய் ஆகியவை கலந்த வைணவத் தலங்களிலும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவதும் நம் முன்னோர் ஆன்மீகத்திலும் மருத்துவத்தை புகுத்தி ஆரோக்கிய வாழ்வுக்கு அடிகோலியுள்ளமை நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

நம் சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மெய்ஞானத்தைக் கொண்டு அண்டத்தில் உள்ள பிறவேறு கிரகங்களையும் (ஞானதிருஷ்டி) பார்த்து ஆய்வு செய்யத் தொடங்கினர். முடிவில் சூரியன், சந்திரன் மட்டுமின்றி இன்னபிற ஐந்து கிரகங்களும் பேரண்டத்தினின்று உலக உயிர்களை ஆட்கொள்கின்றன, ஆட்டிப் படைக்கின்றனவென்று அறிந்தனர். மேலும், இவ்வேழு கிரகங்களின் நிலைகளிலும், செயல்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படும் வகையில் இரு சாயாக்கிரகங்கள் இருப்பதாகக் கண்டு இனங்கண்டு அவற்றிற்கு இராகு, கேது எனவும் பெயரிட்டனர். இறுதியாக நவகோள்களான இவைகள் இறைவனின் சித்தப்படி உலக உயிர்களுக்கு நன்மை தீமைகளை அளிக்கவல்ல நவநாயகர்களாக, ஆளுமையுள்ள ஒன்பது அமைச்சர்களாக விளங்குவதை அறிந்தனர். முன்னைக்கும் பின்னைக்கும் இக்கிரகங்கள் காரணிகளாக இருந்து உலக உயிர்கள் அனைத்தையும் வழிநடத்திச் செல்வதை கிரகங்களோடு ஒப்பிட்டு ஆய்ந்த அப்பெருமக்கள் எதிர்கலத்தை அக்கிரகங்கள் எப்படி நிர்ணயிக்கும் என்பதை யூகித்து மெய்ஞான அறிவால் உணர்ந்து அதிலும் வெற்றி கண்டனர். முக்காலமும் அறிய முற்பட்ட அவர்கள் ஓரு குழந்தை பிறக்கும் போதே அது பிறந்த போது அண்டத்திள்ள நவகோள்களும் எங்கெங்கிருந்து அக் குழந்தையின் மீது என்னென்ன தாக்கங்களை எதிர் காலத்தில் தரக்கூடும் என சோதித்து பார்க்கத் தொடங்கி வெற்றிகண்ட வழியையே மெய்யறிவு சார்ந்த கலையையே ஜோதிடம் என்னும் பெயரால் வகுத்தனர். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக, பல்லாயிரவர்க்கும் பார்த்து பாத்துச் சோதித்த அவர்கள் கிரகங்கள் ஒவ்வொரு குழந்தையின் முக்காலப் பலனையும் ஓர் நியமமாக, ஒழுங்காக சிறிதும் பிழையின்றி நிர்ணயிப்பதை ஜோதிடத்தைக் கண்டு உறுதி செய்தனர்.